தாம்பரம் சேலையூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆட்சி மாற்றம் என்பது ஒரு தீமைக்கு மாற்றாக மற்றொரு தீமையை கொண்டு வருவதாக இருக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

“பேய்க்கு மாற்று பிசாசா?” என்று கேள்வி எழுப்பிய அவர், ஊழல், கொலை, கொள்ளை மற்றும் மதுக்கடைகள் இல்லாத உண்மையான மாற்றமே மக்களுக்குத் தேவை என்று வலியுறுத்தினார்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவுமில்லை என்று சாடிய சீமான், திமுகவை ‘சொர்ணாக்கா’ என்றும் அதிமுகவை ‘வர்ணாக்கா’ என்றும் கிண்டலாக ஒப்பிட்டார்.

தற்போது திமுக ஆட்சியில் இருக்கும் பல அமைச்சர்கள் முன்பு அதிமுகவில் இருந்தவர்கள் தான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இலவசப் பேருந்து பயணம் போன்ற திட்டங்களால் மட்டும் மக்களின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடாது என்றும், ஒட்டுமொத்த ஆட்சி முறையில்தான் மாற்றம் வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கொள்கை பரப்புச் செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாசறை நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சீமான், தோல்வியைக் கண்டு அஞ்சாதவனே வீரன் என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

கல்வி, மருத்துவம் மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசு மருத்துவமனைகளைத் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக மாற்றுவதே தங்களது இலக்கு என்றும், நில வளங்களைப் பாதுகாக்கும் ஆட்சியைத் தாங்கள் வழங்க விரும்புவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.