நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்திப் போராடுவதைப் பார்த்துப் பழகிய நமக்கு, லட்டு கொடுத்துப் போராடும் இந்த நபரின் செயல் ஒரு கசப்பான உண்மையை முகத்தில் அறைந்தாற்போல் சொல்லியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நபர் ஒருவர் சாலையில் செல்வோருக்கு லட்டு கொடுத்து “இதைச் சாப்பிடுங்கள், ஒரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துவிட்டது” என்று கூறுகிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் மக்கள், “இது என்ன கொண்டாட்டமா?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், “ஆமாம், பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி என் மகளுமில்லை, உங்கள் மகளுமில்லை.. அப்புறம் நமக்கென்ன கவலை? லட்டு சாப்பிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாமே” என்று விரக்தியுடன் பதிலளிக்கிறார்.

தினமும் செய்தித்தாள்களில் இது போன்ற செய்திகள் வந்தாலும், மக்கள் தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு சாதாரணமாகச் செல்வதையும், சட்டங்கள் குற்றவாளிகளைத் தண்டிக்கத் தவறுவதையும் அவர் சாடியுள்ளார்.

“ஒரு குரங்கை அடித்தால் கூட எல்லா குரங்குகளும் ஒன்றாகக் கூடிவிடும், ஆனால் இங்கே ஒரு ஏழைச் சிறுமிக்காக அந்தப் பெற்றோர் மட்டுமே தனியாகப் போராடுகிறார்கள்” என்று அவர் பேசும் வார்த்தைகள் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன.