மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் உயிரிழந்த தனது எஜமானரின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் பின்னால் நான்கு கிலோமீட்டர் தூரம் ஓடிச் சென்ற வளர்ப்பு நாயின் நெகிழ்ச்சியான செயல் காண்போரை கண் கலங்கச் செய்துள்ளது. கரயரா காவல் எல்லைக்குட்பட்ட படோரா கிராமத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஜெகதீஷ் பிரஜாபதி என்பவர், சில காரணங்களால் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தத் தகவலறிந்து உறவினர்களும் ஊர் மக்களும் அங்கு திரண்டபோது, உயிரிழந்த ஜெகதீஷின் உடலுக்கு அடியில் அவரது செல்ல நாய் இரவு முழுவதும் அமர்ந்து காவல் காத்துக் கொண்டிருந்த உருக்கமான காட்சியைக் கண்டு அனைவரும் நெகிழ்ந்தனர்.
Shivpuri: Pet dog chases owner’s body for 4km before taking the tractor ride to crematorium, attends his funeral, refrains from eating anything#MadhyaPradesh | #MPNews | #FreePressMP pic.twitter.com/frkSyvF2a3
— Free Press Madhya Pradesh (@FreePressMP) January 21, 2026
“>
காவல்துறை விசாரணைக்குப் பிறகு, பிரேதப் பரிசோதனைக்காக ஜெகதீஷின் உடல் டிராக்டர் வாகனத்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்த நாய் தனது எஜமானரைப் பிரிய மனமில்லாமல் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அந்த வாகனத்தின் பின்னாடியே சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் ஓடி வந்தது. நாயின் தவிப்பைக் கண்ட உறவினர்கள், பாதியிலேயே அதனை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் தகனம் செய்யப்படும் வரை அந்த நாய் உணவு மற்றும் தண்ணீரைத் தவிர்த்துவிட்டுத் தனது எஜமானரின் சிதை அருகிலேயே அமர்ந்திருந்தது. விலங்குகளின் மாறாத நன்றியுணர்வையும் மனிதநேயத்தையும் பறைசாற்றும் இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
