கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பாதுகாப்புப் பணியின்போது, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டி ஒருவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) காலால் எட்டி உதைக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரு மாவட்டம் சுட்டூரில் நேற்று மாநில அளவிலான விவசாய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் முதல்வர் சித்தராமையா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து முதல்வர் தனது வாகன அணிவகுப்புடன் அங்கிருந்து புறப்பட்டார். முதல்வரின் வருகையையொட்டி அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் மைசூரு மாவட்ட எஸ்.பி. மல்லிகார்ஜுன் பாலதண்டி நேரடியாக ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், காவல்துறையினரின் தடையை மீறி முதல்வரின் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த எஸ்.பி. மல்லிகார்ஜுன், ஓடிச் சென்று அந்த வாகன ஓட்டியை நோக்கி தனது காலால் எட்டி உதைக்க முயன்றார்.
உயர் பதவியில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி, பொதுமக்களிடம் இத்தகைய அநாகரிகமான முறையில் நடந்துகொண்டது அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் படம்பிடித்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் “காட்டுத்தீயாக” பரவி வருகிறது.
“சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரியே இவ்வாறு முரட்டுத்தனமாக நடந்துகொள்வதா?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Mysuru SP Mallikarjun Baladandi was caught on camera attempting to kick a biker to clear traffic for #Karnataka CM #Siddaramaiah’s car – an act of pure arrogance in a traffic jam that even the Chief Minister had to face. pic.twitter.com/7JfujThwGZ
— Hate Detector 🔍 (@HateDetectors) January 18, 2026
.
