ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகரும், அந்நாட்டின் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான அலி லாரிஜானி, அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல்களில் இருந்து ஈரானைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார். 2025 ஆகஸ்டில் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு, இவர் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வியூகங்கள் காரணமாகவே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி தலைமையிலான அரசு தப்பித்ததாகக் கருதப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் திட்டங்களை முறியடிக்க, லாரிஜானி சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் போன்ற அண்டை நாடுகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி, போரைத் தவிர்க்கச் செய்துள்ளார். லாரிஜானியின் இந்த நுணுக்கமான அரசியல் நகர்வுகளால் ஆத்திரமடைந்த அமெரிக்க அரசு, தற்போது அவர் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானின் உள்நாட்டுப் போராட்டங்களை கட்டுப்படுத்துவதிலும், ராணுவ அமைப்பில் மாற்றங்களைச் செய்ததிலும்கூட இவரின் கை ஓங்கியிருந்தது.
இந்நிலையில் ஒரு முன்னாள் புரட்சிகர பாதுகாப்பு படை வீரராகவும், அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாகவும் இருக்கும் இவர், அமெரிக்காவின் பிடியில் இருந்து ஈரானை மீட்டெடுத்த ஒரு கவசமாகப் பார்க்கப்படுகிறார். அமெரிக்காவின் தடையைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
