கேரளாவில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு வென்ற நபரை மர்ம கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூர் மாவட்டம் பரவூரைச் சேர்ந்த சாதிக் என்பவருக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தது.

பரிசுத் தொகை கையில் கிடைக்க தாமதமாகும் என்பதாலும், வரி பிடித்தம் போக குறைவான தொகையே கிடைக்கும் என்பதாலும், சாதிக் தனது டிக்கெட்டை அதிக விலைக்கு விற்க முயன்றுள்ளார். இதனை அறிந்த ஒரு கும்பல், டிக்கெட்டை நல்ல விலைக்கு வாங்கிக் கொள்வதாகக் கூறி சாதிக்கை வரவழைத்து, அவரை வலுக்கட்டாயமாக ஒரு வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளது.

மேலும் கடத்தப்பட்ட சாதிக்கை மிரட்டி அவரிடமிருந்த லாட்டரி டிக்கெட்டை பறித்துக்கொண்ட அந்த கும்பல், பின்னர் அவரை இரவு நேரத்தில் நடுவழியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றது. இச்சம்பவம் குறித்து சாதிக் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்க போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். அதிர்ஷ்டமாக கிடைத்த பரிசு, அவருக்கு ஆபத்தாக முடிந்த இந்த வினோத கடத்தல் சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.