பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் வெளியாக இருந்த நிலையில், இருதரப்பு ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்தது. விஜய்யின் கடைசிப் படத்திற்குப் போட்டியாக வேண்டுமென்றே ‘பராசக்தி’ படம் வெளியிடப்படுவதாகக் கூறி, விஜய் ரசிகர்கள் அந்தப் படத்திற்கு எதிராக எதிர்மறையான விமர்சனங்களை பரப்புவதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாகப் பேசிய படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் தயாரிப்பாளர் தேவ் ராம்நாத், படத்தைச் சிதைக்கும் வகையில் அவதூறு பரப்புவது ஆரோக்கியமான சினிமா சூழல் அல்ல என்று தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர்.

குறிப்பாக, ‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் மற்றும் புக் மை ஷோ ரேட்டிங்கில் விஜய் ரசிகர்கள் செயற்கையாக விளையாடுவதாகவும், திரையரங்குகளில் அரசியல் முழக்கங்களை எழுப்புவதாகவும் படக்குழுவினர் குற்றம் சாட்டினர்.

தணிக்கை வாரியத்திடம் சான்றிதழ் வாங்குவதை விட விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புச் சான்றிதழ் வாங்கினால்தான் படம் ஓடும் என்ற அளவிற்குச் சூழல் மோசமாக இருப்பதாக இயக்குநர் சுதா கொங்கரா வேதனை தெரிவித்தார்.

இத்தகைய ‘குண்டர் கலாச்சாரம்’ சினிமாவுக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், மிகவும் நிதானமாகப் பதிலளித்தார்.

சில ரசிகர்கள் செய்யும் தவறான விமர்சனங்களைப் பற்றித் தாம் கவலைப்படவில்லை என்றும், அதற்காக ஒட்டுமொத்த ரசிகர்களையும் குறை கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

“நாங்கள் எப்போதுமே சகோதரர்களாகவே இருக்கிறோம், அந்த உறவு அப்படியேதான் இருக்கிறது” என்று கூறி ரசிகர்களிடையே எழுந்துள்ள மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார்.