சூரத்தின் ஜஹாங்கிராபாத் பகுதியில்  வசித்து வந்த 36 வயதான ஹினேஷா படேல், ஓல்பாட் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் பணியாற்றி வந்தார்.

அவரது கணவர் கேதன் படேலும் அதே அலுவலகத்தில் அதே பதவியில் பணியாற்றி வருகிறார். திங்கட்கிழமை காலையில் இருவரும் வழக்கம்போல வேலைக்குச் செல்லத் தயாராகியுள்ளனர். கேதன் படேல் முதலில் வீட்டை விட்டு வெளியேறி, அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் தனது காரைச் தயார் நிலையில் வைத்துக்கொண்டு ஹினேஷாவுக்காக நீண்ட நேரம் காத்திருந்துள்ளார்.

தனது மனைவி கீழே வராததால் சந்தேகமடைந்த கேதன் படேல், மீண்டும் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அப்போது ஹினேஷா தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதியினருக்கு இடையே நல்ல உறவு இருந்ததாகவும், எவ்வித குடும்பத் தகராறும் இல்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹினேஷா நிலம் தொடர்பான கோப்புகளைக் கையாண்டு வந்ததால், பணிச்சுமை அல்லது அது தொடர்பான ஏதேனும் அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் செல்போனைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அவரது இறுதி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்து வருகின்றனர்.