பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைவர் மசூத் அசார் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ கிளிப் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் தற்கொலைத் தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கானோர் தயாராக இருப்பதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

வைரலாகி வரும் அந்த ஆடியோவில், “எங்களிடம் உள்ள தற்கொலைப்படை வீரர்களின் எண்ணிக்கை உலக ஊடகங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும். அவர்கள் பணம், சொத்து, விசா என எதையும் கடவுளிடம் கேட்பதில்லை; மாறாக ‘ஷாஹாதத்’ எனப்படும் தியாகத்தை (மரணம்) மட்டுமே வேண்டுகிறார்கள். தங்களை உடனடியாகத் தாக்குதலுக்கு அனுப்பக் கோரி எனக்கு கடிதம் மூலம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்,” என்று அசார் கூறுவது போலப் பதிவாகியுள்ளது.

இந்தியப் படைகள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு இந்த ஆடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் தலைமையகத்தின் மீது இந்தியா நடத்திய அதிரடித் தாக்குதலில், அசாரின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த பேரிழப்பைத் தொடர்ந்து, தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தவும், தங்களின் பலத்தைக் காட்டவும் இத்தகைய போலிப் பிரசாரங்களை அந்த அமைப்பு மேற்கொள்வதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மசூத் அசார் பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் பதுங்கியிருப்பதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகியுள்ள ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்தோ அல்லது அது எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்தோ இந்திய அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்பு முகமைகள் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதே சமயம், இத்தகைய மிரட்டல்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்றும், இது பயங்கரவாத அமைப்புகளின் வழக்கமான உளவியல் போர் தந்திரம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா – நியூசிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் வேளையில், இத்தகைய அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.