மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் காலில், 73 வயதான பாஜக எம்.எல்.ஏ. விழுந்து வணங்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த எம்.எல்.ஏ. தேவேந்திர குமார் ஜெயின் (73). இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மஹாரியமான் சிந்தியா (31) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியின் போது, மஹாரியமான் கேக் வெட்டி, எம்.எல்.ஏ. தேவேந்திர குமாருக்கு ஊட்டி விட்டார். அப்போது, தன்னை விட 42 வயது இளையவரான மஹாரியமானின் கால்களைத் தொட்டு வணங்க தேவேந்திர குமார் முற்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மஹாரியமான், உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தினார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் ஒரு இளைஞரின் காலில் விழுவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்த எம்.எல்.ஏ. தேவேந்திர குமார் ஜெயின் கூறியதாவது:”எனது பிறந்தநாளுக்காக மஹாரியமான் வாழ்த்துப் பாடல் பாடியது என்னை நெகிழச் செய்தது. அந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே அவரது கால்களைத் தொட முயன்றேன். இது முற்றிலும் நமது கலாசாரத்தின் வெளிப்பாடு. இளைஞர்களின் கால்களைத் தொடக்கூடாது என்று அரசியலமைப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.”
மேலும் மன்னர் குடும்பப் பின்னணி கொண்ட சிந்தியா குடும்பத்தினர் மீதுள்ள அதீத விசுவாசத்தின் காரணமாகவே எம்.எல்.ஏ. இவ்வாறு நடந்துகொண்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
