கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முரளிவேல் – வரதலட்சுமி (23) தம்பதியினருக்குத் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த மாதம் 20-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
கடந்த சில தினங்களாகக் குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் உடல்நலப் பாதிப்புகள் இருந்ததால், சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அங்கு சிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்குத் தாய் பால் கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தைக்குக் கடுமையான இருமல் ஏற்பட்டு, எவ்வித உடல் அசைவும் இன்றி மயக்கமடைந்தது.
இதனால் பதறிப்போன தாய், குழந்தையை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பால் குடிக்கும்போது புரை ஏறியதால் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, சுவாசிக்க முடியாமல் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிறந்து 20 நாட்களே ஆன நிலையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
