விஜய்யின் திரையுலகப் பயணத்தின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ தணிக்கைக் குழுவின் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், இது குறித்து விஜய் முன்பே எச்சரித்திருந்தது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படத்திற்கு, சென்சார் வாரியம் சான்றிதழ் அளிக்க மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “சாதாரணமாகவே என் படங்களுக்குப் பிரச்சனைகள் வரும், தற்போது நான் அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளதால் கண்டிப்பாகக் கூடுதல் சவால்கள் இருக்கும்” என்று தயாரிப்பாளரிடம் தான் கூறியதை வெளிப்படையாகப் பகிர்ந்திருந்தார். அவர் கணித்தபடியே, அரசியல் காரணங்களுக்காகத் தான் படத்தின் வெளியீடு முடக்கப்படுவதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

தற்போது ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது விஜய் ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு நாளை வரவுள்ள நிலையில், தீர்ப்பு சாதகமாக அமைந்தால் ஜனவரி 10-ம் தேதியே படம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இல்லையெனில் படத்தின் வெளியீடு இந்த மாத இறுதி வரை தள்ளிப்போகக்கூடும். எது எப்படியோ, “அன்றே கணித்தார் தளபதி” என்று விஜய்யின் தீர்க்கதரிசனமான பேச்சை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருவதுடன், படத்தின் வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.