நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை வெளியாகவிருந்த நிலையில், தணிக்கை வாரியம் (Censor Board) படத்திற்குச் சான்றிதழ் வழங்காததால் அதன் வெளியீடு திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு முட்டுக்கட்டை போடப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது அரசியல் களத்திலும் சூடுபிடித்துள்ளது.
விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தனது எக்ஸ் தளத்தில் தணிக்கை வாரியத்தின் இந்த நடவடிக்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார். “அரசுக்கு எதிரான குரல்களை அடக்குபவர்கள் வரிசையில் தணிக்கை வாரியமும் சேர்ந்துவிட்டது; அதிகாரத்தின் முன் கலை மண்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது ஜனநாயகம் நிலைக்க முடியாது” என அவர் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
ஒரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு அரசியல் ரீதியான முட்டுக்கட்டைகள் போடப்படுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்ற கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
