கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தங்களுக்குத் தேவையான தொகுதிகள் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்துத் தங்களின் கூட்டணிக் கட்சியான திமுகவிடமே கேட்டுப் பெறுவோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எல்லாவற்றையும் ஊடகங்களிடம் பேசித் தீர்க்க முடியாது என்றும், காங்கிரஸ் மேலிடத்தின் வழிகாட்டுதலின்படி திமுக தலைமையுடன் நாகரீகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இடங்களைப் பெறுவோம் என்றும் அவர் கூறினார்.

மேலும், அதிகாரப் பகிர்வு குறித்து ராகுல் காந்தியும், மு.க.ஸ்டாலினும் இணைந்து முடிவெடுப்பார்கள் என்ற கருத்தையும் அவர் வழிமொழிந்தார். மத்திய பாஜக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சிதைப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், அதனை எதிர்த்து ஜனவரி 11 முதல் பிப்ரவரி வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இதில் ஒரு முக்கிய மாநாட்டில் பிரியங்கா காந்தி பங்கேற்பார் என்றும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் அளித்த ஊழல் புகார் குறித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, தன் மீதே பல புகார்களை வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி மற்றவர்கள் மீது ஊழல் புகார் கூறுவது வேடிக்கையாக இருப்பதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்தோடு அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் விமர்சித்தார்.