தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்‘ திரைப்படத்தின் ரிலீஸ் விவகாரம், தற்போது நீதிமன்றப் படி ஏறியுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்தப் படம், ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைக் குழு (Censor Board) இதுவரை படத்திற்குச் சான்றிதழ் வழங்காததால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது.
டிசம்பர் மாதமே படத்தைப் பார்த்த அதிகாரிகள், இன்னும் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது ஏன் என நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, “தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.. படத்தை ஏன் ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யக்கூடாது?” என்று கேள்வி எழுப்பியதுதான் இப்போது பெரும் விவாதமாகியுள்ளது.
சென்சார் சிக்கலைத் தீர்க்க உத்தரவிடாமல், ரிலீஸ் தேதியை மாற்றச் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
மேலும், கேரளா மற்றும் கர்நாடகாவில் ஜனவரி 9-ஆம் தேதிக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், தேதியை மாற்றினால் ரசிகர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது.
