கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், ஆன்லைன் டெலிவரி ஊழியர் போல வேடமிட்டு தீயணைப்பு கருவிகளை திருடிய இளைஞரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கிரேட்டர் நொய்டா மேற்கில் உள்ள ‘அம்ரபாலி கோல்ஃப் ஹோம்ஸ்’ மற்றும் ‘கிங்ஸ்வுட் பார்க்’ ஆகிய குடியிருப்பு சங்கங்களுக்குள் இளைஞர் ஒருவர் ஆன்லைன் டெலிவரி முகவர் போல நுழைந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த குடியிருப்பாளர்கள், அவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
Greater Noida West की Amrapali Golf Homes & Kingswood Park सोसायटी के निवासियों ने फायर हाइड्रेंट काटकर चोरी करने वाले युवक को पकड़ा।
युवक के बैग से 4 फायर हाइड्रेंट बरामद ।
आरोपी ऑनलाइन सामान की डिलीवरी के बहाने सोसायटी में आया था। pic.twitter.com/fNjsDJC57l— Greater Noida West (@GreaterNoidaW) January 5, 2026
குடியிருப்பாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு விசாரணை நடத்தியபோது, அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதையடுத்து அவர் வைத்திருந்த பையைத் திறந்து சோதித்தபோது, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது பைக்குள் திருடப்பட்ட 4 தீயணைப்பு ஹைட்ரண்ட் வால்வுகள் மற்றும் அவற்றை அகற்றப் பயன்படுத்தப்படும் நீண்ட உலோகக் குழாய் உள்ளிட்ட கருவிகள் இருந்தன.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், குடியிருப்பாளர்கள் அந்த இளைஞரைத் தரைவிரிப்பில் அமர வைத்து, “இதெல்லாம் என்ன? எதற்காகத் திருடினாய்?” என்று ஹிந்தியில் கேள்வி எழுப்புவது பதிவாகியுள்ளது. அங்கிருந்த பெண் ஒருவர், “படிக்காததுதான் உன்னைத் திருடத் தூண்டியதா?” என அவரிடம் ஆவேசமாகக் கேட்பதும் அந்த வீடியோவில் உள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிஸ்ராக் காவல் நிலையப் போலீஸார், அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இது குறித்து மத்திய நொய்டா துணை ஆணையர் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்ட நபர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார். அடுக்குமாடி குடியிருப்புகளில் டெலிவரி ஊழியர்கள் என்ற போர்வையில் மர்ம நபர்கள் ஊடுருவுவது குறித்து குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனப் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
