அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாகவும், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி, அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தால் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமெரிக்காவிற்குள் குற்றவாளிகளை ஊடுருவச் செய்தல் போன்ற காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டாலும், இது வெனிசுலாவின் இயற்கை வளங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகவே உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.
வெனிசுலாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த இலக்கு கொலம்பியாவாக இருக்கக்கூடும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. கொலம்பியா அதிபர் கஸ்டாவோ பெட்ரோவுக்கும் டிரம்புக்கும் இடையே ஏற்கனவே மோதல் நிலவி வரும் நிலையில், கொலம்பியாவில் உள்ள போதைப்பொருள் முகாம்களை உடனடியாக மூட வேண்டும் என்று டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் ஒருவேளை கொலம்பியா இதனைச் செய்யத் தவறினால், அமெரிக்காவே நேரடியாகக் களமிறங்கி அந்த முகாம்களை அழிக்கும் என்று டிரம்ப் கூறியிருப்பது, வெனிசுலாவைத் தொடர்ந்து கொலம்பிய அதிபரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வியையும் பதற்றத்தையும் உலக அரங்கில் உருவாக்கியுள்ளது.
