அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரின் அட்டவணையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள இந்தத் தொடரின் தொடக்க ஆட்டங்களில் இந்தியா போன்ற பெரிய அணிகள் அமெரிக்கா மற்றும் நமீபியா போன்ற கத்துக்குட்டி அணிகளுடன் மோதுவது ரசிகர்களின் ஆர்வத்தைக் குறைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் இங்கிலாந்து போன்ற பலமான அணிகள் மோதினால்தான் சுவாரஸ்யம் இருக்கும் என்றும், தற்போது ஐசிசி தொடர்கள் அடிக்கடி நடத்தப்படுவதால் உலகக்கோப்பை மீதான மேஜிக் மற்றும் எதிர்பார்ப்பு முற்றிலும் காணாமல் போய்விட்டதாகவும் அவர் தனது யூடியூப் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார்.
டி20 போட்டிகள் மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் எதிர்காலம் குறித்தும் அஸ்வின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்ற பிறகு ஒருநாள் போட்டிகளைப் பார்க்க ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்றும், 2027 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்த வடிவம் மெல்லச் சாகும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குத் தீர்வாக கால்பந்து உலகக்கோப்பையைப் போல நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே முக்கியத் தொடர்களை நடத்த வேண்டும் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். அப்போதுதான் ரசிகர்களிடம் பழைய எதிர்பார்ப்பு மீண்டும் உருவாகும் என்றும் அஸ்வின் அந்தப் பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார்.
