ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அலுவலகத்தில், வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கை பரப்புச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே தவெக பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இன்று வரை அதனைச் செய்யாததால்தான் பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன எனச் சாடிய அவர், மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்குப் பதிலளித்த செங்கோட்டையன், “யார் வேண்டுமானாலும் கூட்டணி குறித்துக் கருத்துச் சொல்லலாம், ஆனால் விஜய்யைத் தமிழகத்தின் முதலமைச்சராக ஏற்றுக்கொள்கிற கட்சிகள்தான் எங்களது கூட்டணியில் இணையும்; அவர்களை நாங்கள் வாழ்த்தி வரவேற்போம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தவெக-வைத் தாக்குவதற்குக் காரணம், வரும் தேர்தலில் தவெக தான் வெற்றியை ருசிக்கப் போகிறது என்ற அச்சம்தான் என்றும் அவர் கூறினார். “ஆளும் கட்சியை எதிர்க்கட்சி விமர்சிப்பதில்லை, மாறாக எல்லாரும் விஜய்யைத் தான் விமர்சிக்கிறார்கள்; இதிலிருந்தே மக்கள் யாரைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
