உத்தர பிரதேச மாநிலத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என எந்தப் பயங்கரமான வழக்கில் ஒருவர் சிறையில் இருந்தாலும், அவர்களுக்குப் போலி ஆவணங்கள் மூலம் ஜாமீன் பெற்றுத் தரும் ஒரு தொழில்முறை மோசடி கும்பலை அம்மாநில போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதுவரை 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு இவர்கள் ஜாமீன் பெற்றுத் தந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி கும்பல், போலி நில வருவாய் ஆவணங்கள், போலி ஆதார் அட்டைகள் மற்றும் போலியாகத் தயாரிக்கப்பட்ட அடையாளச் சான்றுகளைப் பயன்படுத்தி நீதிமன்றத்தைத் திசை திருப்பி ஜாமீன் பெற்றுள்ளனர். இதற்காகக் குற்றவாளிகளிடம் இருந்து ஒரு வழக்கிற்கு சுமார் 20,000 ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில், ஏற்கனவே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியே இருந்த பிரவீன் தீட்சித் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் விண்ணப்பம் எழுதும் வேலை பார்த்த பிரேம் சங்கர் (எ) பிங்கு உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிங்கு என்பவர் தான் ஜாமீன் தர ஆட்களை ஏற்பாடு செய்வதிலும், போலி ஆவணங்களைத் தயாரிப்பதிலும் மூளையாகச் செயல்பட்டு வந்துள்ளார். ராம் கிஷோர் என்பவர் 13 வழக்குகளில் போலி நில ஆவணங்களை வழங்கி மோசடி செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.