திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காகவே இந்த கொடூர செயலில் ஈடுபட்ட சிறுவர்கள், அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை விதைத்துள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், தமிழகத்தில் அண்மைக்காலமாக பெருகிவரும் போதைப்பொருள் கலாச்சாரமும், அதனைத் தடுக்கத் தவறிய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்குமே இத்தகைய குற்றங்களுக்குக் காரணம் என்று சாடியுள்ளார். மேலும், பள்ளி, கல்லூரிகளில் அதிகரித்து வரும் போதைப் பயன்பாட்டை அலட்சியப்படுத்தியதன் விளைவாகவே, இன்று பொதுவெளியில் எந்தவொரு அச்சமுமின்றி கும்பல் மனநிலையுடன் இச்சிறுவர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

https://x.com/i/status/2006002281427452191

இதனிடையே, இந்தச் சம்பவத்திற்கு தற்போதைய சினிமாக்களும் ஒரு முக்கிய காரணம் என்று இயக்குநர் பேரரசு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மைக்காலத் திரைப்படங்களில் வன்முறை காட்சிகள் மிகைப்படுத்திக் காட்டப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், சமூகத்தின் மீது அரசாங்கத்திற்கு எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறதோ, அதே அளவு அக்கறை திரைப்பட இயக்குநர்களுக்கும், பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட முன்னணி நடிகர்களுக்கும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். சினிமாவில் காட்டப்படும் போதை மற்றும் ஆயுதக் கலாச்சாரம் இளைய தலைமுறையினரை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாகக் கூறிய அவர், திரைத்துறையினர் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.