பாட்டாளி மக்கள் கட்சியை இரண்டாக உடைக்க தி.மு.க.வின் தூண்டுதலின் பேரில் சிலர் செயல்படுவதாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:

சேலத்தில் பா.ம.க. பொதுக்குழு என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தகைய அழுகை நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. கட்சியின் சட்டவிதிகளின்படி, பொதுக்குழுவைக் கூட்ட தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அல்லது பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

தலைவர் அன்புமணி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவே உண்மையானது. இது குறித்து முறைப்படி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. ஒரு வலுவான வெற்றிக் கூட்டணியை அமைக்கும். யாருடன் கூட்டணி என்பது குறித்து, வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ராமதாஸுடன் இருக்கும் ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகியோர் பா.ம.க.வை இரண்டாக உடைக்க முயற்சி செய்கின்றனர். டாக்டர் அன்புமணியைப் பற்றி விமர்சிக்க ஜி.கே.மணிக்கு எந்தத் தகுதியும் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரிவுக்கு ஆளும் தி.மு.க.வே முக்கியக் காரணம். இதற்கு எதிர்வரும் தேர்தலில் தி.மு.க.வுக்குத் தக்க பதிலடியைத் தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.