இந்தோனேசியாவின் வடக்கு சுலாவாசி மாகாணம், மனடோ பகுதியில் உள்ள ‘வேர்தா தாமாய்’என்ற முதியோர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 16 முதியவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுமார் 32 முதியவர்கள் தங்கியிருந்த அந்த இல்லத்தில், அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென தீப் பற்றியது. மளமளவென பரவிய தீயால் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்ட முதியவர்களை மீட்க அக்கம் பக்கத்தினர் முயன்றபோதிலும், 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்;
ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். மேலும், படுகாயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
