வங்கதேசத்தில் நடைபெறும் சம்பவங்கள் வருத்தமளிப்பதாகவும், ஆனால் அவற்றை விமர்சிப்பவர்கள் இந்தியாவில் நடைபெறும் கும்பல் படுகொலைகளின்போது அமைதியாக இருப்பதாகவும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தி குற்றம்சாட்டினார்.
ஸ்ரீநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் காஷ்மீரி மொழியில் பேசத் தொடங்கினார். அப்போது, ஒரு பத்திரிகையாளர் அவரை உருது மொழியில் பேசுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மெஹபூபா முஃப்தி, காஷ்மீரி மொழிக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
“தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆங்கிலத்திலோ அல்லது உருதுவிலோ பேசச் சொல்லி கேட்பீர்களா? காஷ்மீர் பத்திரிகையாளர்கள் காஷ்மீரி மொழிக்கு கொஞ்சம் மரியாதை காட்ட வேண்டும். காஷ்மீர் கொஞ்சமே மீதமுள்ளது. அதற்காவது மரியாதை அளியுங்கள்” என்று அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் காஷ்மீரி மொழியிலேயே தனது உரையை தொடர்ந்தார்.
மேலும் அவர் பேசுகையில், “வங்கதேசத்தில் நடப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. ஆனால், அதை விமர்சிப்பவர்கள் இங்கு கும்பல் வன்முறைகள், படுகொலைகள் நடைபெறும்போது அமைதியாக இருக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம், பிற மாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, பல்வேறு மாநிலங்களுக்கு அமைச்சர் குழுக்களை அனுப்ப வேண்டும். குறிப்பாக, உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் இது அவசியம்” என்றார்.
உத்தரகண்டில் சால்வை விற்பனையாளர் மீது நடந்த தாக்குதல் சம்பவம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். “அந்த சம்பவம் நடந்த உடனே, உத்தரகண்ட் டிஜிபியை சமூக வலைதளத்தில் டேக் செய்து, தலையீடு செய்ய கேட்டுக்கொண்டேன். அதன் பின்னரே குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். காவல்துறையில் இன்னும் பொறுப்புடன் செயல்படும் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், 72 மணி நேரத்திற்குள் மூன்று சம்பவங்கள் நடந்தது கவலையளிக்கிறது. உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் என்ன நடக்கிறது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
