பாமக கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்பு தனித்தனியாக செயல்படுவதோடு கட்சியை தங்களுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக கட்சியின் தலைவராக அங்கீகரித்து அறிவித்தது.
இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்த நிலையில் தனக்கும் தன் அப்பாவுக்கும் இடையேயான பிரச்சனைக்கு ஜிகே மணி தான் காரணம் என்றும் அவரை துரோகி என்றும் அன்புமணி விமர்சித்தார். இதனை ஜிகே மணி மறுத்ததோடு மிகுந்த வேதனை தெரிவித்தார்.
இதற்கிடையில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி ஜிகே மணிக்கு அன்புமணி தரப்பில் பாமக ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றால் அவரை கட்சியிலிருந்து நீக்குவோம் என அன்புமணி கூறிய நிலையில் இன்று அவரை கட்சியிலிருந்து நீக்கி அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
