ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன மேலாளராகப் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர், சக அதிகாரிகளால் ஓடும் காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி உதய்பூரில் உள்ள ஒரு விடுதியில் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நடத்திய பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அந்தப் பெண் பங்கேற்றுள்ளார்.

நள்ளிரவில் பார்ட்டி முடிந்த பிறகு, அந்தப் பெண்ணை வீட்டில் விடுவதாகக் கூறி சிஇஓ, நிறுவனத்தின் பெண் நிர்வாகத் தலைவர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் தங்கள் காரில் ஏற்றியுள்ளனர். வழியில் அவருக்கு ஏதோ ஒரு பொருளைக் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளனர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தபோது, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் பெண் அதிகாரியின் கணவர் ஆகிய இருவரும் தன்னைத் தொடர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

அதிகாலை 5 மணியளவில் அவரை வீட்டில் இறக்கிவிட்ட நிலையில், அவரது உடலில் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து உதய்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பெண் அதிகாரி உட்பட மூன்று பேரையும் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களுக்கான குற்றப் பிரிவு காவல்துறையினர் இந்த வழக்கின் விசாரணையைத் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.