தமிழக வெற்றிக் கழகம், எம்.ஜி.ஆரை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக கூறுவது பொருந்தாதது என்று, வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் நிருபர்களிடம் பேசிய அவர், “எம்.ஜி.ஆரை யாரும் தங்களுக்கென கையில் எடுத்துக் கொள்ள முடியாது. தி.மு.க. மீது எம்.ஜி.ஆர். எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பது கருணாநிதி உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்ததே” என்றார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியது குறித்து மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும், அந்த முடிவை யாரும் தனிப்பட்ட முறையில் எடுத்து விட முடியாது என்றும் அவர் கூறினார். “தி.மு.க. நல்ல சக்தியாக இருந்ததால்தான், இத்தனை ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்து ஆட்சியை வழங்கி வருகின்றனர்” என்றார்.
மேலும், “எந்த கட்சியும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியை முடிக்கும்போது சில சங்கடங்களை சந்திப்பது இயல்பானது. ஆனால், தி.மு.க. ஆட்சி அமைந்த முதல் நாளில் கிடைத்த வரவேற்பை விட, தற்போது கூடுதல் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு காரணம், இந்த கட்சியையும் ஆட்சியையும் மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதுதான்” என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலினை மீண்டும் கொண்டு வர மக்கள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
தி.மு.க.-வில் அதிகளவில் இளைஞர்கள் இணைந்தால், மூத்த நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் அவர் விளக்கினார். பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத் திட்டத்தை, இந்த ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளிலேயே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார் என்றும், அது தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், நடப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் பணம் வழங்குவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டால், அவையும் தேர்தலை நோக்கி அல்ல; மக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் முத்துசாமி கூறினார்.
