தமிழக அரசு மருத்துவத் துறையில் தற்போது 17 ஆயிரம் நிரந்தர செவிலியர்களும், 13 ஆயிரம் ஒப்பந்த செவிலியர்களும் பணியாற்றி வருகின்றனர். இதில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு மாதம் ரூ.18,000 தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

பணி நிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த செவிலியர்கள் கடந்த 4 மாதங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். சமீப காலமாக இந்த போராட்டம் தீவிரமடைந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 700-க்கும் மேற்பட்ட எம்.ஆர்.பி. செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்ட நிலையில், அங்கும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மீண்டும் கைது செய்யப்பட்ட செவிலியர்கள் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் அவர்கள் மண்டபத்திலிருந்து வெளியேறி, நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, இன்று காணொலி வாயிலாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில், ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு படிப்படியாக பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும்.

ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட 724 செவிலியர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும். மேலும் இந்த அறிவிப்பின் மூலம், நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த செவிலியர்களுக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது.