மும்பை புறநகர் ரயில் நிலையத்தில் மருத்துவ உதவி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையிலிருந்து பன்வெல் நோக்கிச் சென்ற ரயிலில் பயணம் செய்த ஹர்ஷ் பட்டேல் என்ற இளைஞருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
சக பயணிகள் கொடுத்த தகவலின்படி, ரயில் வாஷி நிலையத்தை வந்தடைந்ததும் அவர் அவசரமாகக் கீழே இறக்கப்பட்டார். அங்கு முதலுதவி உபகரணங்களோ அல்லது சக்கர நாற்காலியோ இல்லாததால், ஒரு துணியின் உதவியுடன் சக பயணிகள் அவரைத் தூக்கிச் சென்று அங்கிருந்த 108 ஆம்புலன்ஸில் ஏற்றினர். ஆனால், அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இருக்கையில் இல்லை.
அவர் மதிய உணவு சாப்பிடச் சென்றிருந்தது நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகே தெரிய வந்தது. சுமார் 20 நிமிடங்கள் வரை ஓட்டுநருக்காகக் காத்திருந்த நிலையில், நிலைமை மோசமடைந்ததால் அங்கிருந்த போலீஸ் ஜீப் மூலம் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியிடத்தில் இருந்திருந்தால் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்துத் தனது சகோதரரைக் காப்பாற்றியிருக்கலாம் என உயிரிழந்தவரின் சகோதரி அம்பிகா சமூக வலைதளத்தில் கண்ணீருடன் பதிவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்துச் சத்ரபதி சிவாஜி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவசர கால ஊர்தி ஓட்டுநர்களின் இத்தகைய கவனக்குறைவான செயல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
