தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்தார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்தச் சந்திப்பின் போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை வீழ்த்துவதற்கான வியூகங்கள், கூட்டணி ஒற்றுமை மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

‘ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்’ என சந்திப்பிற்குப் பிறகு பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி உடனான முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் கடந்த தேர்தல்களின் வாக்கு சதவீதம் மற்றும் கள நிலவரங்கள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

தொகுதிப் பங்கீடு குறித்தோ அல்லது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் அரசியல் வருகை குறித்தோ எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.

“அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை” எனக் குறிப்பிட்ட அவர், தை பிறந்தால் கூட்டணி விவகாரங்களில் தெளிவான வழி பிறக்கும் என்றும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.