உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி அஹனா (16), துரித உணவுகளைத் தொடர்ந்து உட்கொண்டதால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுவயது முதலே வீட்டு உணவைத் தவிர்த்து பீட்சா, பர்கர், சவ்மின் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளையே அவர் பிரதானமாக உண்டு வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு அம்ரோஹா மற்றும் மொராதாபாத் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது அவரது வயிற்றில் குடல் பாதிப்பு கண்டறியப்பட்டு, சுமார் 7 லிட்டர் திரவம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இருப்பினும், நிலைமை சீராகாததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இதய செயலிழப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.
அஹனாவின் மரணம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள், நீண்ட கால துரித உணவுப் பழக்கத்தால் அவரது நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக சிதைந்துவிட்டதாகவும், குடல்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அம்ரோஹா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.பி. சிங் கூறுகையில், “அதிக காரம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த துரித உணவுகள் குழந்தைகளின் பசியைத் தூண்டாமல் உடலை பலவீனமாக்குகின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இத்தகைய உணவுகளை வழங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்” என எச்சரித்துள்ளார்.
“வீட்டு உணவை மதிக்காமல் போனது எங்கள் தவறுதான்” என மாணவியின் உறவினர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
