திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தந்தை எதிர்பாராத விதமாக தும்மியதால், 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ், தனது மகன் ஹரிஹரனை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் ஹரிஹரன் அமர்ந்திருந்த நிலையில், ஓட்டுநர் இருக்கையில் இருந்த கோவிந்தராஜுக்கு திடீரென கடுமையான தும்மல் ஏற்பட்டுள்ளது. இதில் நிலைதடுமாறிய அவர், எதிர்பாராத விதமாக பைக்கின் வேகத்தை அதிகரிக்கும் ‘ஆக்சிலரேட்டரை’ பலமாக முறுக்கியுள்ளார்.
இந்நிலையில் தந்தையின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்னல் வேகத்தில் பாய்ந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் ஹரிஹரன், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
மேலும் படுகாயமடைந்த கோவிந்தராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தந்தை தும்மிய ஒரு நொடிப் பொழுதில் நடந்த இந்த விபரீத விபத்து குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சாதாரண தும்மல் சிறுவனின் உயிரைப் பறித்த துயரம் ஒட்டுமொத்த கிராமத்தையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
