தங்கத்தின் விலை திடீரென ராக்கெட் வேகத்தில் உயர்வதும், பின்னர் லேசாக குறைவதுமாக தொடர்ந்து மாறி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களின் அவசர மற்றும் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய, கைவசம் உள்ள தங்க நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்து வழங்கப்பட்ட கடன் தொகை கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், அதே ஆண்டின் அக்டோபர் மாதத்துக்குள் இது ரூ.3.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் 40 முதல் 45 சதவீதம் அளவில் நகைக்கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் சூழ்நிலையில், வாங்கிய கடன் தொகை அடகு வைக்கப்பட்ட நகையின் தற்போதைய மதிப்பை விட அதிகமாக இருப்பது வங்கிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற நேரங்களில், நகைக்கடனை திருப்பிச் செலுத்த பலர் ஆர்வம் காட்டுவதில்லை. சிலர், நகைகளை மீட்காமல் அப்படியே வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடமே விட்டுவிடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவலை தெரிவித்துள்ளது. நகைக்கடன் தொடர்பான இடர் மேலாண்மை அதிகரித்து வருவதால், தங்க நகைகள் மீது வழங்கப்படும் கடன்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
தற்போது, தங்க நகையின் மதிப்பில் 70 முதல் 72 சதவீதம் வரையிலான அளவில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், எதிர்கால அபாயங்களை கருத்தில் கொண்டு, இனி தங்க நகையின் மதிப்பில் இருந்து 60 முதல் 65 சதவீதம் வரையிலான அளவுக்கு மட்டுமே கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவு, தங்க நகைக் கடன் பெறுவோருக்கு முக்கிய மாற்றமாக இருக்கும் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
