மத்திய பிரதேச மாநிலத்தில், காதலரை திருமணம் செய்த இளம்பெண்ணை குடும்பத்தினர் சமூக ரீதியாக மறுத்து, அவரது உருவப் பொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் விதிஷா பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (23). அவர் வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்னர், கவிதா தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
View this post on Instagram
இந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கவிதாவை குடும்பத்திலிருந்து முழுமையாக விலக்குவதாக அறிவித்ததுடன், அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இதன் அடையாளமாக, ஈமச்சடங்குகளை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி, மாவினால் செய்யப்பட்ட கவிதாவின் உருவப் பொம்மையை பாடையில் வைத்து, ஊர்வலமாக மயானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பாரம்பரிய முறைப்படி சிதை அமைக்கப்பட்டு, இறுதிச்சடங்குகளும் செய்யப்பட்டது. இறுதியாக, உருவப் பொம்மைக்குத் தீ மூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய கவிதாவின் தந்தை ராம்பாபு குஷ்வாஹா, மகளின் முடிவு குடும்பத்தை ஆழ்ந்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளதாகவும், இது தனது வாழ்க்கையில் சந்தித்த மிகுந்த துயரமான தருணம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உருவப் பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தி, சடங்குகள் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
