உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில், சிறுமி ஒருவரை கேலி செய்ததாகக் கூறப்படும் சிறுவர்களின் தாய்மாரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுக்கு உட்பட்ட சில சிறுவர்கள், 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளிக்குச் செல்லும் வழியில் தொடர்ந்து கேலி செய்தும், ஆபாசமாகப் பேசியும் வந்ததாக கூறப்படுகிறது. இதனை சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதால், அவர்களை நேரடியாக கைது செய்யாமல், அவர்களுக்கு உரிய நற்பண்புகளை கற்பிக்கத் தவறியதாகக் கூறி, அவர்களது நான்கு தாய்மாரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் அஜய்பால் சிங் கூறுகையில்,
“இந்தச் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர். குழந்தைகளை நல்வழிப்படுத்தத் தவறிய பெற்றோர்களைத் தண்டிப்பதன் மூலம் சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கை செய்தியை வழங்க விரும்புகிறோம். குழந்தைகளுக்குச் சிறந்த மதிப்புகளைப் போதிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கே உள்ளது,” என்றார்.
கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
