ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு முக்கிய மாற்றத்தை இந்திய ரயில்வே (IRCTC) கொண்டு வந்துள்ளது. போலி கணக்குகள் மூலம் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வதைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும், இனி ‘ஆதார் இணைப்பு’ கட்டாயமாக்கப்படுகிறது. தற்போது குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் அமலில் உள்ள இந்த விதிமுறை, படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, வரும் ஜனவரி 12-ஆம் தேதி முதல் எந்த நேரத்தில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது.

இந்த புதிய நடைமுறையினால் முறைகேடுகள் குறையும் என்றும், முன்பதிவு மையங்களுக்கு (Counter) இந்த விதிமுறை பொருந்தாது என்பதால் சாதாரண மக்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. அதே சமயம், ஆதார் இணைப்பின் போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படாமல் இருப்பதை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதன் மூலம் இடைத்தரகர்களின் தொல்லை குறைந்து, சாமானிய மக்களுக்கும் எளிதாக டிக்கெட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.