இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது விதிகளைப் பின்பற்றாமல் சென்றதாக ஒரு வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ராஞ்சி விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், தோனி தனது ஒரு கையில் கடிகாரமும், மற்றொரு கையில் ஃபிட்னஸ் பேண்டும் அணிந்தபடி பாதுகாப்பு வளையத்தைக் கடக்கிறார்.

வழக்கமாக சாதாரண பயணிகள் பெல்ட், கைக்கடிகாரம் என அனைத்தையும் கழற்றி டிரேயில் வைத்துச் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், தோனி எதையும் கழற்றாமல் தடையின்றிச் சென்றது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் பாரபட்சத்தைக் காட்டுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், “சாதாரண மக்கள் என்றால் வரிசையின் கடைசிக்கு அனுப்பும் அதிகாரிகள், பிரபலங்களுக்கு மட்டும் ஏன் விதியைத் தளர்த்துகிறார்கள்?” எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாதுகாப்பு விதிமுறைகள் என்பது ஒருவரின் புகழ் அல்லது பணத்தைப் பொறுத்து மாறக்கூடாது என்றும், இது போன்ற ‘விஐபி ட்ரீட்மென்ட்’ விமான நிலையப் பாதுகாப்பின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்குவதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எக்ஸ் (X) தளத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை (CISF) டேக் செய்து, விதிகள் ஏன் முறையாகப் பின்பற்றப்படவில்லை என மக்கள் கேள்வி எழுப்பி வருவது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.