மும்பை மாநகரின் சாகி நாகா பகுதியில், பரபரப்பான மாலை நேரப் போக்குவரத்திற்கு இடையே ஒரே மோட்டார் சைக்கிளில் 7 இளைஞர்கள் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹோண்டா யூனிகார்ன்’ ரக மோட்டார் சைக்கிளில் இட நெருக்கடியையும் பொருட்படுத்தாமல், ஒரு இளைஞர் மற்றவர்களைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி செல்லும் இந்தக் காட்சிகள் சாலைப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளன.
View this post on Instagram
போக்குவரத்து விதிகளை அப்பட்டமாக மீறி, தங்களது உயிரையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் இந்த இளைஞர்கள் செயல்பட்டதைக் கண்ட இணையவாசிகள், சம்பந்தப்பட்ட வாகனத்தின் எண்ணைக் குறிப்பிட்டு மும்பை காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடல் பாலத்தில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த இளைஞர்களின் ஆபத்தான பைக் சாகசமும் மும்பைவாசிகளிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
