பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் அணுகுமுறை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மௌனம் காப்பது குறித்துப் பேசிய அவர், ஒரு அரசியல்வாதி எல்லா நேரத்திலும் அமைதியாக இருக்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.

“கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருக்கணும்” என்று விஜய் முன்பு பேசியிருந்ததைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, மக்கள் பிரச்சனைகள் நடக்கும்போது ஒரு தலைவர் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால், மக்கள் எப்படி அவரை நம்பி ஆட்சிப் பொறுப்பை வழங்குவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தவறு நடக்கும்போது அதைத் தட்டிக்கேட்க வேண்டும் அல்லது சரி என்றால் அதை ஆதரிக்க வேண்டும் என்பதே அரசியலின் அடிப்படை என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். ஒரு சினிமாவில் நடிகருக்குப் பின்னால் நிற்பது போல அரசியலில் இருக்க முடியாது என்றும், முக்கியமான சமூகப் பிரச்சனைகளில் வாய் திறக்காமல் இருப்பது முறையான அரசியல் கிடையாது என்றும் அவர் சாடியுள்ளார். பேச வேண்டிய இடத்தில் பேசினால் மட்டுமே ஒருவரால் நல்ல அரசியல்வாதியாக உருவாக முடியும் என்பதே அண்ணாமலையின் கருத்தாக உள்ளது.