உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் மஹுவா கிராமத்தில், குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை அகற்றக் கோரி அப்பகுதிப் பெண்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையாக மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்ரா-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கிராவ்லி பகுதியில் அமைந்துள்ள இந்த மதுக்கடையால் குடும்ப வன்முறைகள், பொது அமைதிக்குக் குந்தகம் மற்றும் மதுப்பழக்கம் அதிகரிப்பதாக நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
शराबी पतियों से परेशान पत्नियों ने शराब के ठेके में किया हंगामा, शराब को बाहर निकालकर नष्ट किया।
वायरल वीडियो आगरा जिले के महुअर गांव का है। pic.twitter.com/wOV9nFxRh1
— Abhimanyu Singh Journalist (@Abhimanyu1305) December 17, 2025
அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான பெண்கள், மதுக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த மதுபாட்டில்களை வீதியில் வீசி உடைத்துச் சேதப்படுத்தியதுடன் கடையின் பெயர்ப்பலகையையும் அடித்து நொறுக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கூட்டத்தைக் கலைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மக்களின் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தாலும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்துவது சட்டவிரோதமானது என்று தெரிவித்த காவல்துறையினர், கண்காணிப்புப் படக்கருவிகளின் உதவியுடன் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராமப்புறங்களில் மதுக்கடைகளால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் மற்றும் அவற்றுக்கு எதிரான மக்கள் போராட்டம் இச்சம்பவத்தின் மூலம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
