தமிழ்நாடு, புதுவை மற்றும் கேரள சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கு இன்று தலைமைக் கழகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இன்றைய எழுச்சியே அதிமுக இமாலய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது உறுதி” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அப்போது, உதயநிதி ஸ்டாலின் “அதிமுக எஞ்சின் இல்லாத கார்” என்று விமர்சித்தது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், “உதயநிதி இன்னும் நீராவி எஞ்சின் காலத்திலேயே இருக்கிறார். ஆனால், அதிமுக இப்போது மின்சார தொழில்நுட்பத்தில் புல்லட் ரயில் போல மிக வேகமாகச் செல்கிறது. அப்டேட் ஆகாமல் எங்களைப் பார்த்து அவர் பேசுவது, அவரையே கேவலப்படுத்திக் கொள்கிறார்” என்று காட்டமாக விமர்சித்தார்.
மேலும், திமுகவில் உள்ள அமைச்சர் ரகுபதியையும் கடுமையாக விமர்சித்த அவர், “பணத்திற்காகவும் பதவிக்காகவும் கட்சி மாறி, இப்போது உதயநிதிக்கு பல்லக்கு தூக்கும் ரகுபதிக்கு அதிமுகவைப் பற்றிப் பேசத் தகுதி இல்லை” என்றும் சாடினார்.
