சென்னையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, அதிகப்படியான திரைநேரத்தால் (Screen Time) ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் தூக்கப் பிரச்சினைகள் குறித்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் (ஐந்தில் இரண்டு குழந்தைகள்) அதிக திரைநேரம் காரணமாகத் தூக்கக் குறைபாடுகளை எதிர்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 523 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 39% பேருக்குச் சீரற்ற உறக்கம், உறங்கச் செல்வதில் தாமதம், நடு இரவில் முழிப்பு போன்ற பிரச்சினைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

படுக்கையில் திரையைப் பார்ப்பதால், தூக்கப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் 3.8 மடங்கு அதிகரிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகள் ஒரு நாளில் ஒரு மணி நேரத்துக்கு மேல் திரைகளைப் பார்ப்பதை அனுமதிக்கக் கூடாது எனவும், உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் அணைத்துவிட வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.