தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலமே இருப்பதால் அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. ஆளும் தி.மு.க., முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சிகளுடன் இந்த முறை புதிதாக த.வெ.க.வும் களமிறங்குவதால், மாநில அரசியலில் நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய், ஆட்சியில் பங்கு குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனிடையே, கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளை த.வெ.க. தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. த.வெ.க. அணியில் அ.ம.மு.க. மற்றும் புதிய தமிழகம் கட்சி இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. (அன்புமணி) ஆகிய கட்சிகளுடன் கூட்டணிக்கான ரகசிய பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜனவரி தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச வேட்பாளர் பட்டியலை அவர் தயார் செய்து வைத்துள்ளதாகவும், ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில், 60 சதவீத இடங்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்படவுள்ளதுடன், மீதமுள்ள 40 சதவீதம் பிரபலங்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும், சில பிரபல திரையரங்க உரிமையாளர்கள் சென்னை, திருச்சி, நெல்லை, ஆலங்குளம் உள்ளிட்ட தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. த.வெ.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர்களுக்கும் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தை பொங்கலுக்கு பின்னர் வேட்பாளர் தேர்வை நிறைவு செய்து, அதற்கான அறிவிப்பை விஜய் உடனடியாக வெளியிட உள்ளார்.
இதற்கிடையில், தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே த.வெ.க.வின் அரசியல் பயணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி உள் அரங்கில் மக்கள் சந்திப்பை நடத்தினார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் பொதுக்கூட்டம் வாயிலாகவும் அவர் மக்களை சந்தித்தார்.
வரும் நாட்களில் ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் வரை தொடர்ந்து பிரசாரம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசியல் அரங்கில் புதிய வரவாக உள்ள த.வெ.க., சட்டசபைத் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது.
