அதிமுக செயற்குழு–பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
“28 மாதங்கள் கழித்து வேறு வழியில்லாமல் மகளிர்க்கான ரூ.1,000 திட்டத்தை திமுக தொடங்கியுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்படுவதும் அதிமுகவின் தொடர்ச்சியான அழுத்தத்தால் தான். மக்கள் உதவித்தொகை பெற்றாலும், வாக்கு அதிமுகவுக்கே வரும்,” என்றார்.
“அம்மா மினி கிளினிக், இலவச இருசக்கர வாகன உதவி உள்ளிட்ட பல மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது; ஆனால் கல்விக்கட்டணத்தை உயர்த்திய இந்த அரசு, மாணவர்களின் ஆதரவை பெற தேர்தலை முன்னிட்டு 10 லட்சம் மடிக்கணினிகளை அறிவித்துள்ளது,” என்றார்
கல்லூரி திறந்து ஐந்து மாதம் ஆகிவிட்டபோது தான் மடிக்கணினி வழங்கப்படுகிறது; இதனால் என்ன பயன்? நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் மூலம் திமுக ஆட்சியைப் பிடித்தது. கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல்–டீசல் விலை குறைப்பு, கல்விக்கடன் ரத்து – எது நிறைவேற்றப்பட்டது?” எனக் கேள்வி எழுப்பினார்.
டெல்டா மாவட்டங்களில் 15 நாட்கள் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் நெல் குவியல்கள் நாசமடைந்தன. விவசாயிகளின் நிலைமை பார்க்காமல் ரயில் நிலையத்திற்கு சென்று விட்டார் உதயநிதி. விவசாயிகளை நேரில் சந்திக்க கூட இல்லாமல் துணை முதலமைச்சர் திரும்பிச் சென்றார்,” என்றார்.
மின் கட்டணம் 52% வரை உயர்த்தப்பட்டுள்ளது. ‘மின்கட்டணம் என்றாலே ஷாக் அடிக்கிறது’ என்று சொன்ன முதலமைச்சரின் ஆட்சியில் இன்று ‘மின்கட்டணத்தை கேட்டாலே’ மக்கள் உண்மையிலேயே ஷாக் அடிக்கின்றனர். வரி மேல் வரி விதித்து மக்களைப் பிழிந்துகொண்டிருக்கிறது அரசு,” என்று அவர் கூறினார்.
“தமிழ்நாட்டில் உடல் உறுப்பு முறைகேடு அதிர்ச்சி அளிக்கும் நிலையில் உள்ளது; திமுக ஆட்சியில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் கிட்னி முறைகேடு தொடர்பான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” எனக் கூறினார்.
“2019ல் அதிமுக ஆட்சியில் ரூ.3 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்பட்டன. 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் சொல்வது பச்சைப்பொய். முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால், வெறும் வெள்ளை காகிதத்தைத் தான் காட்டுகிறார்கள்,” என விமர்சித்தார்.
“அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைப்பதே திமுகவின் வழக்கம். திமுகவால் புதிய திட்டம் ஒன்று கூட உருவாக்கப்படவில்லை,” என்றார்.
மேலும் “கொரோனா காலத்தில் ஒரு ரூபாய் கூட வரி உயர்த்தாமல் ஆட்சியை நடத்தினோம். தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவே பாராட்டும் வகையில் செயல்பட்டது அதிமுக அரசு,” என்று பழனிசாமி தெரிவித்தார்.
