முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், தாம் இரானி கோப்பைப் போட்டியில் சதமடிப்பதற்கு உதவும் வகையில், சக வீரர் குர்சரண் சிங் எலும்பு முறிந்த கையோடு பேட் செய்ய வந்த நெகிழ்ச்சியான நிகழ்வு குறித்துப் பேசியுள்ளார்.
1989-ஆம் ஆண்டு அப்போதைய ரஞ்சி கோப்பையின் சாம்பியனான தில்லி மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் மோதிய இரானி கோப்பைப் போட்டியில், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 209 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது 90 ரன்களைக் கடந்து சதத்தை நெருங்கியிருந்த சச்சினுக்கு உதவுவதற்காக, தேர்வுக் குழுத் தலைவர் ராஜ் சிங் துங்கார்பூரின் வேண்டுகோளின் பேரில், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு களம் காண முடியாத நிலையில் இருந்த குர்சரண் சிங் கடைசி வீரராக பேட் செய்ய வந்தார்.

குர்சரண் சிங்கின் இந்தச் செயல் தனக்குப் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட சச்சின், “நான் சதம் அடித்தேனா இல்லையா என்பதை விட, அப்படி ஒரு நிலையில் அவர் விளையாட முடிவு செய்ததுதான் என்னை மிகவும் நெகிழச் செய்தது,” என்று தெரிவித்தார். அந்த ஆட்டத்திற்குப் பிறகு சச்சின் இந்திய அணிக்குத் தேர்வானார்.
பின்வந்த நாட்களில் குர்சரண் சிங்கும் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார். இந்த ஆட்டத்திற்குப் பிறகு மைதானத்திலும், ஆடை மாற்றும் அறையிலும் குர்சரண் சிங்கிற்குத் தனது கனிவான நன்றியைத் தெரிவித்ததாக மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் சச்சின் நினைவு கூர்ந்தார்.
