தமிழக வெற்றிக் கழக (தவெக) பொதுச் செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு, புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ஈஷா சிங் கடுமையாக எச்சரிக்கை விடுக்கும் காட்சி கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி உப்பளம் துறைமுக திடலில் நடைபெறவுள்ள தவெக பொதுக்கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலால் 41 பேர் பலியான சம்பவத்திற்குப் பின் நடைபெறும் இது முதலாவது பெரிய பொதுக்கூட்டம் என்பதால், காவல்துறையினர் கடும் பாதுகாப்பு மற்றும் பல நிபந்தனைகளை அறிவித்துள்ளனர்.

 

தமிழகத்திலிருந்து கூட்டத்தில் பங்கேற்பதற்கு தடை, மொத்தம் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி, க்யூஆர் கோட் கொண்ட அனுமதிச் சீட்டு உள்ளவர்களுக்கே நுழைவு என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அனுமதிச் சீட்டு இல்லாத சில தொண்டர்களை உள்நுழையச் செய்ய தவெக நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பெண்  எஸ்பி ஈஷா சிங், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடுமையாக, “நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நீங்கள் சொல்லாதீர்கள்… உங்களால் பலர் உயிரிழந்துள்ளனர்” என கண்டித்த காட்சி வீடியோவாக பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான காட்சி வெளியானதைத் தொடர்ந்து, பொதுமக்களும் அரசியல் வட்டாரங்களும் அதனைப் பற்றி தீவிரமாக விவாதித்து வருகின்றன.