தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் டிசம்பர் 16-ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்தவிருக்கும் நிலையில், கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையிலான நிர்வாகிகள் முதலில் பவளத்தபாளையத்தில் அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

ஆனால், ஏழு ஏக்கர் பரப்பளவிலான அந்த இடத்தில் போதுமான வசதிகள் இல்லை எனவும், வாகன நிறுத்தம் உள்ளிட்ட காரணங்களுக்காக மாற்று இடத்தைத் தேர்வு செய்யுமாறும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், திட்டமிட்ட இடத்தில் அனுமதி மறுப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், இறுதி நேரத்தில் எவ்விதச் சிக்கலும் வரக் கூடாது என்பதற்காகத் தவெகவினர் மாற்று இடத்தைத் தேர்வு செய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டச் செயலாளர் பாலாஜி தலைமையில் தவெக நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் கந்தசாமியைச் சந்தித்து மாற்று இடம் கோரி மனு அளித்துள்ளனர். ஈரோடு-பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் மொத்தம் 26 ஏக்கர் பரப்பளவில் (16 ஏக்கரில் பொதுக்கூட்டத்திற்கும், 10 ஏக்கரில் வாகன நிறுத்தத்திற்கும்) இடத்தை ஒதுக்குமாறு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்துத் தெரிவித்த தவெகவினர், திட்டமிட்டபடி டிசம்பர் 16-ஆம் தேதி விஜய் கண்டிப்பாக ஈரோட்டுக்கு வருவார் என்றும், அதற்கான அனைத்துப் பணிகளும் தயாராகி வருவதாகவும் உறுதி அளித்தனர். மேலும், காவல்துறை கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்து விரைவில் அனுமதி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.