ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பிறகு, அணி வீரர்கள் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடியபோது, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அதில் கலந்துகொள்ளாமல் தவிர்த்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு, போட்டி முடிந்த பிறகு, அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் நடந்தது.
அணியின் தற்காலிகக் கேப்டன் கே.எல். ராகுல் கேக் வெட்டிக் கொண்டாடியபோது, மற்ற வீரர்கள் உற்சாகமாகக் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால், கோலி கொண்டாட்டம் நடக்கும் லாபிக்குள் வந்தும், அவரை அழைத்தும், அவர் கவனிக்காமல் நேராக லிஃப்ட் நோக்கிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுமட்டுமின்றி, மைதானத்தில் ஆடை மாற்றும் அறைக்கு கோலி சென்றபோது, அங்கு நின்றிருந்த தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை அவர் முற்றிலும் புறக்கணித்த மற்றுமொரு வீடியோவும் வெளியானது.
KOHLI ignored even cake cutting 👀pic.twitter.com/JktqdzJJyD
— koach. (@KOHL1theGOAT) December 1, 2025
கோலி, வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்த்தது மற்றும் பயிற்சியாளர் கம்பீரை புறக்கணித்தது போன்ற நிகழ்வுகள், அணிக்குள் இருவருக்கும் இடையே உள்ள உறவு நல்ல முறையில் இல்லை என்ற ஊகங்களை கிளப்பியுள்ளது. இந்தப் போட்டியில், விராட் கோலி தனது 52வது ஒருநாள் சதத்தை அடித்து, அணி வெற்றி பெறுவதற்கு முக்கியப் பங்காற்றினார்.
மேலும், ரோஹித் சர்மா 57 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றிக்குப் பிறகு, அணி நிர்வாகத்தில் உள்விவகாரங்களில் பதற்றம் நிலவுவது குறித்துச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், வரவிருக்கும் எஞ்சிய இரண்டு ஒருநாள் போட்டிகளில் அணியின் சூழல் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
