சீனாவில், ஒரே நாளில் சந்தித்த ஒரு பெண்ணை வெறும் நான்கு மணி நேரத்தில் திருமணம் செய்துகொண்ட 40 வயது இளைஞர் ஒருவருக்கு, ஒரு மாத காலத்திற்குள் தனது வாழ்நாள் சேமிப்பான 2,40,000 யுவான்கள் (சுமார் $34,000) முழுவதும் காலியான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹுனான் மாகாணத்தைச் (Hunan province) சேர்ந்த ஹுவாங் ஜாங்செங் (Huang Zhongcheng) என்ற அந்த இளைஞர், தனது மனைவியால் நிதி ரீதியாகச் சுரண்டப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார்.
ஆகஸ்ட் 21 அன்று, ஹுவாங் சென்ற வரன் தேடும் சந்திப்புக்கு (Blind Date) ஒரே நேரத்தில் ஒன்பது திருமணத் தரகர்கள் வந்து, ஒரே பெண்ணை இவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்தப் பெண் அவசரப்படுத்தியதால், அன்றே மாலை 5 மணிக்குள் திருமணத்தைப் பதிவு செய்ததாகவும், “இன்று ஒரு கனவு போல இருக்கிறது” என்று அப்போது தான் கூறியதாகவும் ஹுவாங் நினைவுகூறுகிறார்.
திருமணமான முதல் நாள் இரவைத் தவிர, அதன் பிறகு அவர் நெருங்கிப் பழக முயன்றபோது, அந்தப் பெண் இவரைத் தவிர்த்துள்ளார். மேலும், திருமணமான இரண்டே நாட்களில் குவாங்டாங் மாகாணத்திற்கு (Guangdong Province) சென்று பணம் சம்பாதிக்கும்படி தன்னை வற்புறுத்தியதாகவும், அதன்பிறகு அடிக்கடி பல்வேறு காரணங்களைக் கூறி பணம் கேட்டதாகவும் ஹுவாங் குற்றம் சாட்டியுள்ளார்.
திருமணமான ஒரு மாதத்திற்குள், அவரது வங்கிக் கணக்கில் இருந்த அத்தனை சேமிப்புப் பணத்தையும் அந்தப் பெண் செலவழித்துவிட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
