உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில், தனது கர்ப்பிணி மனைவியைத்  தவிர்க்க விரும்பிய ஒரு உள்ளூர் பைக் மெக்கானிக், போலி கடத்தல் நாடகத்தை  அரங்கேற்றிய சம்பவம் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு அம்பலமாகியுள்ளது.

ஃபர்கான் என்ற அந்த நபர், இரண்டு நாட்கள் தலைமறைவாக இருந்ததுடன், ஒரு சிறுவனுக்குப் பணம் கொடுத்து கடத்தல் கதையை மனைவியிடம் சொல்லுமாறு அனுப்பி வைத்துள்ளார்.

நவம்பர் 26 அன்று மாலை, ஃபர்கான் ஒரு சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிறிது நேரத்தில், அந்தச் சிறுவன் ஃபர்கானின் மனைவி ஆயிஷாவிடம் சென்று, மூன்று நான்கு பேர் காரில் வந்து ஃபர்கானை அடித்துத் துன்புறுத்தி கடத்திச் சென்றுவிட்டதாகப் பொய்ச் செய்தியைக் கூறியுள்ளான்.

பதறிய ஆயிஷா போலீஸில் புகார் அளிக்க, இரண்டு தனிப்படைகள் விசாரணையில் இறங்கின. ஆனால், அருகில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைச் சோதித்தபோது, ஃபர்கான் காயமின்றி நிதானமாக ஒரு ஆட்டோவில் ஏறிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

48 மணி நேரத் தேடலுக்குப் பிறகு ஃபர்கானைப் பிடித்து விசாரித்ததில், மனைவியுடன் அடிக்கடி சண்டை வந்ததால் அவரைத் ‘தவிர்க்க’ இந்த நாடகத்தை அரங்கேற்றியதை அவர் ஒப்புக்கொண்டார். இந்தச் சதித் திட்டத்திற்காக அந்தச் சிறுவனுக்கு அவர் ₹2,000 கொடுத்துள்ளார்.